துபாய் : துபாயில் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி ஆகியன அக்டோபர் 14ம் தேதியன்று மாலை நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது. வளைகுடா தமிழர் அமைப்பின் நிறுவனர் எஃப்.எம்.அன்வர் பாஷா தலைமை தாங்கினார். சபீர் வரவேற்றார். பிரைம் மெடிக்கல் சென்டரின் நரம்பியல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜரத்தினம் மருத்துவ விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர். அவர் தனது உரையில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஏற்படும் நரம்பியல் நோய்கள் குறித்து வீடியோ விளக்கப்படங்களுடன் விவரித்தார். அத்தகைய சூழ்நிலையில் மருத்துவரின் உதவியை நாடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நகைச்சுவை நடிகர் பாண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது நகைச்சுவையின் மூலம் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தளித்தார். அவர் தனது உரையில் கடல் கடந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தங்களது வருமானத்தை சிறப்பான வழியில் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பல்வேறு படங்களில் தனது நகைச்சுவை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் முஹம்மது மஃரூப், அம்மன் ரியல் எஸ்டேட் பொன்னையன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களுக்கு ஈடிஏ லங்கா இயக்குநர் இஸ்மாயில், அஜ்மான் சமூக சேவகர் மூர்த்தி, துபாய் தமிழ்நாடு பண்பாட்டுக் கழக நிறுவன புரவலர் திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக், யுஏஇ தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர். சாதிக் நன்றி கூறினார். நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை திருச்சி அம்மன் ரியல் எஸ்டேட், அன்வர் ரியல் எஸ்டேட் மற்றும் துபாய் மரைக்காயர் ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்கள் செய்திருந்தன.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
சார்ஜா : அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு தேதிகளிலும் மின்னொளியில் சார்ஜா விளையாட்டு அரங்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை யு.ஏ.இ தமிழ் சங்கம் தனது உறுப்பினர்களுக்காக நடத்தியது. ஆரம்பத்தில் 8 குழுக்களையே திட்டமிட்டிருந்தாலும், எல்லோரின் புருவ உயர்த்தலோடு 10 அணிகள் தங்கள் ஒப்புதலை அளித்து அணி சேர்த்தன. முந்தைய திட்டமிட்டலின் அடிப்படையில் முதலில் பதிவு செய்த 8 அணிகளைக் கொண்டே டி.என்.சி.டி.,2010 வீறு நடை இட்டது. அத்தனை உறுப்பினர்களும் தமிழ்ச் சங்கத்தை சார்ந்தவர்களே என்பது தனிச் சிறப்பு.
பங்கு பெற்ற அணிகள் விவரம்: மதுரை சார்ஜர்ஸ், கோயம்புத்தூர் சேலன்ஜர்ஸ், சென்னை கிங்ஸ், தஞ்சாவூர் ராயல்ஸ், திருச்சி ரைடர்ஸ், திருநெல்வேலி டேர் டெவில்ஸ், மெட்ராஸ் கிங்ஸ் லெவன், கும்பகோணம் நைட்ஸ். பெண்களை கண்களென போற்றும் நம் தமிழ்க் கலாச்சாரத்தின் பெருமை மிளிர, மகளிர் அணியும் யு.ஏ.இ., யில் முதன் முறையாக களம் இறங்கி பங்கு பெற்றது. விடிகாலை 3 மணிவரை குடும்பங்களும் குழந்தைகளும் சுமார் 75% அரங்கை நிறைத்து இருந்தது ஒரு ஆச்சர்யமே. அனைவரும் மகிழ்ந்திருக்க இப்படி ஒரு விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தியதில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறது யு.ஏ.இ., தமிழ்ச் சங்கம். அணிகளுக்கிடையே நிலவிய விளையாட்டு பெருந்தன்மையும், நட்பும், உற்சாகமும் இந்த நிகழ்வின் அணிகலன்களே.
யு.ஏ.இ., தமிழ்ச் சங்கம் போக்குவரத்து, சிற்றுண்டி, இரவு உணவு உள்ளிட்ட இன்னும் இதர ஏற்பாடுகளை பார்வையாளருக்கும் விளையாட்டு வீரருக்கும் செவ்வனே அளித்து பெருமை தேடிக் கொண்டது. மின் குறுந்தகவல்களின் மூலம் போட்டி நேரம், முடிவுகள் பற்றிய உடனுக்குடன் தகவல்களை அவரவர் கைபேசிக்கு அனுப்பி ஆச்சர்யத்தை அன்புடன் அளித்தது. போட்டியின் இறுதி நாளில் வருகை தந்த சுவாமி நாதன், மதன் ஆகியோர் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
தினமலர் வாசகர் லாரன்ஸ் பிரபு
0 comments:
Post a Comment