கோடைகால விமான கால அட்டவணை அமல்: துபை செல்லும் விமான நேரத்தில் மாற்றம்
By திருச்சி
கோடைகால விமானப் போக்குவரத்து அட்டவணை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது; இதையடுத்து, துபை செல்லும் இரவு நேர விமானம் பகல் நேரத்தில் இயக்கப்படவுள்ளதாக ஏர்-இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
திருச்சியிலிருந்து சிங்கப்பூர், துபை, மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமானப் போக்குவரத்து உள்ளது.
இதனால், தினசரி ஆயிரக்கணக்கோனோர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்வதால், இங்கு சர்வதேச விமானப் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தற்போது குளிர்கால விமான நேர கால அட்டவணை முடிந்து, கோடைகால அட்டவணை அமலுக்கு வந்துள்ளதால் சில விமான பயண நேரங்கள் மாறியுள்ளன.
இதன்படி, திருச்சி வழியாக தினசரி நள்ளிரவு 12.20-க்கு துபையிலிருந்து வந்து பின்னர் 1.30-க்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை முதல் பகல் நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய நேரப்படி பிற்பகல் 1.35-க்கு வந்து பிற்பகல் 2.40-க்கு திருச்சியிலிருந்து புறப்படுகின்றது.
சிங்கப்பூர் செல்லும் விமானம் வழக்கம்போல தினசரி அதிகாலை 3.20-க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்று, மறுநாள் பகல் 12.25-க்கு திருச்சி வழியாக சென்னை சென்று அங்கிருந்து வாரத்தில் 4 நாட்கள் மட்டும் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்கிறது. மற்றபடி, தினசரி 3 முறை மலேசியாவுக்கு இயக்கப்படும் ஏர் ஏசியா விமானப் போக்குவரத்தில் மாற்றமில்லை.
புதிய அட்டவணைப்படி, தினசரி காலை 11.25-க்கு மலேசியா செல்லும் மலிண்டோ ஏர்லைன்ஸ் போக்குவரத்தில் வாரத்தில் செவ்வாய், சனிக்கிழமைகளில் இந்தோனேஷியாவில் பாலி மற்றும் ஜகர்தாவுக்கு செல்கிறது. அதேபோல சிங்கப்பூருக்கு தினசரி இரவு 11.45-க்கும் வாரத்தில் 4 நாட்கள் காலை 11.10-க்கும் டைகர் ஏர்லைன்ஸ் இயக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து வந்து செல்லும் ஸ்ரீலங்கன் விமானம் வழக்கமான நேரத்தில் காலை 9.20-க்கும் பிற்பகல் 3 மணிக்கும் வந்து செல்லும்.
இதில் வாரத்தில் 4 நாள் மட்டும் கொழும்பிலிருந்து புறப்பட்டு மற்றொரு விமான நிலையமான ஹம்பன்தோடா சென்று அங்கிருந்து திருச்சி வந்து செல்லும்.
Nandri :
0 comments:
Post a Comment