துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் ஆகியவை துபாய் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அல் வாஸல் மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமினை மே 06ம் தேதியன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வெகு சிறப்பாக நடத்தின. துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம்.ஸலாஹுத்தீன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், இதுபோன்ற சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்களைப் பாராட்டினார்.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் முன்னிலை வகித்தார். ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.முஹம்மது தாஹா வரவேற்றார். ரத்ததான முகாமினை இந்திய கன்சல் சஞ்சய் வர்மா துவக்கி வைத்து முதலாவதாக தானும் ரத்ததானம் செய்தார். மேலும் ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார்.
ரத்ததான முகாமில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவரும், நேபாளம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண், பெண் என்ற பேதமின்றி ரத்ததானம் வழங்க முன் வந்திருந்தனர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வமுடன் பணியாற்றினர். நிகழ்வில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும இயக்குநர் அஹமது சலாஹுத்தீன், மனிதவள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், மேலாளர் நிஜாமுத்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்விறகான அனுசரணையினை அல் ரவாபி, அல் அய்ன் வாட்டர், அல்கபே, மூன் டிவி, சிவ் ஸ்டார் பவன், அல் ரியாமி பிரிண்டிங் பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கியிருந்தன
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri : www.dinamalar.com
1 comments:
வாழ்த்துகள்....
Post a Comment