விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்த சிவக்குமாருக்கும், பிலிப்பைன்ஸ் மரியா மெர்ஸிடஸ்க்கும் துபாயில் கனிந்த காதல், விருதுநகரில் திருமணத்தில் முடிந்தது. விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி தாமரை தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி.
இவரது மகன் சிவக்குமார்(29). பி.எஸ்சி., விசுவல் கம்யூனிகேசன் படித்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன் துபாயில் எலக்ட்ரிக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். இதே கடையில் பிலிப்பைன்சின் மணிலா நகரைச் சேர்ந்த மரியா மெர்ஸிடஸ் என்பவரும் வேலை செய்தார். அங்கு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தற்போது சிவக்குமார், துபாயில் வேறு நிறுவனத்தில் முதன்மை கட்டுப்பாட்டாளராகவும், மரியா மெர்ஸிடஸ் அங்குள்ள தனியார் விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை முதுநிலை அலுவலராகவும் பணி புரிகின்றனர். சமீபத்தில் அங்கு பதிவு திருமணம் செய்த இருவரும், இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
பெற்றோரின் சம்மதம் கிடைத்தது. இவர்களது திருமணம் விருதுநகரில் நேற்று நடந்தது. மஞ்சள் நிறத்தை இயற்கையாகவே பூசிக்கொண்ட, மரியா மெர்ஸிடஸ் கூறியதாவது: இந்தியா மீது எனக்கு நல்ல எண்ணம் உண்டு. தமிழகத்தை பற்றி சிவக்குமாரை காதலித்த பின், அதிகம் தெரிந்து கொண்டேன். நட்போடு பழகியபோது, இவரது தமிழர் குணம் என்னை கவர்ந்தது. பெற்றோர் என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். ஆனால், இதய நோயாளிகளான அவர்கள், திருமணத்திற்கு வரவில்லை.
இருப்பினும், உறவினர்களை அனுப்பி வைத்தனர். இரு நாட்டிற்கும் பண்டைய காலத்திலேயே நல்ல உறவு இருந்தது என்பதை கேள்விபட்டேன். இதுபோல எங்கள் உறவும் இறுதி மூச்சு வரை இருக்கும், என்றார். சிவக்குமாரிடம் கேட்டபோது, புன்னகையை தவிர வேறு ஒன்றும் கூறவில்லை.
0 comments:
Post a Comment