துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ஏப்ரல் 15ம் தேதியன்று மாலை, ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பொதுச்செயலாளர் சி.ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர் கீதா கிருஷ்ணன் மற்றும் இணைப் பொருளாளர் சுந்தர் ஆகியோர் வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக ஜெயந்தி மாலா சுரேஷ் தலைவராகவும், துணைத்தலைவராக ஏ.லியாக்கத் அலி, பொதுச்செயலாளராக சி. ஜெகந்நாதன், பொருளாளராக கீதா கிருஷ்ணன், இணைப் பொருளாளராக சுந்தர்ராஜன், விழாக்குழு செயலாளராக ஏ. முஹம்மது தாஹா, கமிட்டி உறுப்பினர்களாக ஜி. விஜயேந்திரன், ஜெ.எஸ். விஜயராகவன், பி.பாலகிருஷ்ணன், பிரசன்னா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மூத்த உறுப்பினர் பேராசிரியர் ஆறுமுகம் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நடன ஆசிரியை கவிதா பிரசன்னா மற்றும் பாடல் ஆசிரியை சந்திரா கீதா கிருஷ்ணன் ஆகியோரது வடிவமைப்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆகாஷ் அருள் எனும் ஐந்து வயது சிறுவன் கீ போர்டு முதல் முறையாக அரங்கில் வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்றான். நிகழ்வினை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் துபாய் தமிழ்ச் சங்க அங்கத்தினர்கள் திரளாக பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment