ரியாத் : ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்றத்தினர் நடத்திய கோடை விழா தஃபர்ரஜ்ஜுடன் ஒருநாள் என்னும் பெயரில் மே 13ம் தேதியன்று நதா, ஹம்மதியா மகிழகங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவில் நீச்சல் விளையாட்டுகள், அலசல் அரங்கம், ஊமை விளையாட்டு, சொல்லுங்கள் வெல்லுங்கள், குறுக்கெழுத்துப் புதிர்கள், பொது அறிவு வினாடி வினா, இஸ்லாமிய வினாடி வினா ஆகிய போட்டிகளை ஹைதர் அலி, லக்கி ஷாஜஹான், இப்னு ஹம்துன், ஷாஹுல் ஹமீது, இம்தியாஸ், அபுல்ஹசன் ஆகியோர் நடத்தினர். இறுதியாக, சகோ.எம்பிஎம். கஸ்ஸாலி இயக்கத்தில் கணிக்காட்சியாக 'நபியுடன் ஒரு நாள்' சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிறுவர்களுக்கான கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை சூப்பர் இப்ராஹீம், சலாஹுத்தீன், அப்துல் அஸீஸ், ரஃபீக் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.
மகளிருக்கான விளையாட்டுகள், திருமதிகள் ஃபரீதா ஷரீஃப், கதீஜா இம்தியாஸ், மும்தாஜ் ஃபாருக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன. கடந்த ஆண்டு ரியாத் பன்னாட்டு இந்தியப்பள்ளியில் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பில் தமிழில் முதல் நிலை பெற்ற மாணவ, மாணவிகள் ஹமீதா நஸ்லுன் சிதாரா, முஹம்மது சுலைமான் ஆகியோர் பாராட்டும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். மேலும், நடந்து முடிந்த தமிழக மேல்நிலைப் பள்ளித் தேர்வில் 1180 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ஆறாவதாக வந்த மாணவர், பன்னாட்டு இந்தியப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்னும் பெருமிதங் கொண்டு அவருடைய தகப்பனார் ரிபாயிடம் பாராட்டும், வெகுமதியான பரிசிலும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை இம்தியாஸ், ஹைதர்அலி, முஹம்மது ஷரீஃப், அபுல்ஹசன், ரஃபீக், ஷாஜஹான் ஆகியோர் முன்னெடுக்க, விழா ஒருங்கிணைப்பாளராக இப்னுஹம்துன் செயலாற்றினார். விழாவுக்கு வந்திருந்த அனைவரும் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்தினர்.
தினமலர் வாசகர் சிக்கந்தர்
0 comments:
Post a Comment