Wednesday, May 18, 2011

அமீரகத் தமிழ் மன்றத்தில் மகளிர் தின விழா

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் பெண்கள் மட்டுமே பங்கு கொண்ட மகளிர் தின விழா நிகழ்ச்சி கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான தாமரை தலைமையில் துபாயில் வெகு சிறப்பாக அரங்கேறியது. மகளிர் பாடல் குழுவினரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் புதிய மெட்டில் குழந்தைகள் பாரதியார் பாடல்களைப் பாடினர். சியாமளா சிவகுமாரின் வரவேற்புரையை தொடர்ந்து பிரசித்தம் குழுவினர் வரவேற்பு நடனத்தை நிகழ்த்தினர். 'பெண் கல்வியின் அவசியத்தை' வலியுறுத்தி ரேணுகா குழுவினர், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வழங்கினர்.அதனைத் தொடர்ந்து நிவேதிதா ஆனந்தன் குழுவினரின் நடனமும், அமீரக மேடைகளில் முதன் முறையாக சிறுமியர் சிலம்பாட்டம் ஆடியதும் பார்வையாளர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. முன்னதாக கவிதா பிரசன்னா நடனக் குழுவினரின் கிராமிய நடனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

>ஜசீலா நவ்ஃபல் மகளிர் தினம் குறித்து சுருக்கமாக உரையாற்றினார். சங்க கால இலக்கியங்களை அடிப்படையாக வைத்து லக்ஷ்மி ப்ரியா மற்றும் பொற்செல்வி ஆகியோர் வழங்கிய சொற்சித்திரம் நிகழ்ச்சியும் ரோஷிணி, ஸ்வேதா, கதீஜா மற்றும் ஆயிஷா குழுவினர் அரங்கேற்றிய வசனங்களற்ற குறுநாடகமும் பார்வையாளர்களின் வரவேற்பையும் கைததட்டல்களையும் பெற்றன. அதனைத் தொடர்ந்த 'இசைச்சாரல்' நிகழ்ச்சியில் ஸ்ரீவித்யா (கீ போர்டு), நிவேதிதா (வீணை), பெனாசிர் (டிரம் பேட்ஸ்), கிருஷ்ணப்ரியா (வயலின்) ஆகியோர் வெவ்வேறு வாத்தியக் கருவிகளை இசைத்து பெண்கள் மட்டுமே பங்கு பெற்று இசையமைத்த முதல் மேடை என்ற பெருமையை அமீரகத் தமிழ் மன்றத்திற்கு ஏற்படுத்தினர். ஒளி ஒலிக்கோப்புகளை இணைத்து பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட 'சினேகமான சினேகிதியே' என்ற வேடிக்கையும் வினோதமும் நிறைந்த நிகழ்ச்சியை அமைப்பின் செயலாளர் ஜெஸிலாவும், பெனாசிர் ஃபாத்திமாவும் சுவை குன்றாமல் வழங்கினர். 'பெண் கல்வியின் அவசியம' என்ற தலைப்பில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் ஷேக் சிந்தா மதார் முதல் பரிசைப் பெற்றார். சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆசாத், நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்வாதி ஸ்வாமி ஆகியோர் தேர்ந்தெடுத்த கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரையை ஊடகவியலாளர் மாலன் நடுவராக இருந்து தேர்வு செய்தார்.

 

உபயோகமில்லாத பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட பொருட்களுக்கான போட்டியில் சிறந்த கைவினைக் கலைஞருக்கான பரிசை ஸ்ரீவாணியும், சிறந்த சமையல் கலைஞருக்காக நடத்தப்பட்ட போட்டியில் வென்றதற்காக 'சுவை அரசி' பட்டத்தை வஹிதா நஜ்முதீனும், மூன்றிலிருந்து ஒன்பது வயது குழந்தைகள் கலந்து கொண்ட சிறுமியருக்கான போட்டியில் சிறந்த தளிர்நடைக்கான பட்டத்தை நேஹா சுவாமிநாதனும் பெற்றார். சமூகப் பணிகளில் தம்மை சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் யாஸ்மின் நஜ்முதீன் சதக் அமீரகத்தின் சிறந்த தமிழ்ப்பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விழாவில் நடனமாடியவர்களுக்கும் பங்கு பெற்றவர்களுக்கும் பரிசுகளை எனித், சுதந்திர செல்வி, காந்திமதி ஆகியோர் வழங்கினர். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய கவிஞர் தாமரை 'பெண்கள் தினம் கொண்டாடப்படுவதின் அவசியத்தையும் அதன் பின்னணியையும்' விளக்கினார். தொடர்ந்து பரிசு குலுக்கலும் நன்றியுரையும் நிகழ்ந்தேறின. விழாவுக்கான ஏற்பாடுகளை காமராஜன், ஆசிப் மீரான், சிவகுமார், ஃபாரூக் அலியார், ரமணி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 

 நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

Tuesday, May 10, 2011

அபுதாபியில் தமிழ்ப் பு‌த்தாண்டு விழா

அபுதாபி : அபுதாபி தமிழ் மகளிர் வட்டத்தின் சார்பில் ஏப்ரல் 29ம் தேதியன்று 10வது ஆண்டாக தமிழ்ப் புத்தாண்டு விழா வெகு சிறப்பாகக் ‌கொண்டாடப்பட்டது. 10வது வருட தமிழ்ப் புத்தாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகத் தலைவி மீனா வெங்கடேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் மல்லிகா, செண்பகவல்லி, பானு, சுதா, விஜி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

இந்திய சோஷியல் ஆடிட்டோரியத்தில் பாட்டு, ஓவியம், நடனம் மற்றும் சமையல் போட்டிகள் நடத்தப்பட்டது. அமீரகத்தில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ் மகளிருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு அபுதாபி தமிழ் மகளிர் வட்டத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

 

 

போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ் பாரம்பரிய உணவுகள் பகல் விருந்தாக அளிக்கப்பட்டது.

 நமது செய்தியாளர் ரவி

Sunday, May 8, 2011

அன்னையர் தின வாழ்த்துக்கள்

என் கண்களில் நீ பாய்ச்சிய நம்பிக்கை ஒளி

என் காதுகளில் நீ தந்த பேரானந்தப் பேச்சு

என் மனமெங்கும் கறைபடாத உன் காட்சி

என் உயிரெங்கும் நிரம்பி நின்ற உன்னாட்சி

 

என் வயிறாற நீ ஊட்டிய அமுதில் புது மிடுக்கு

என் நடையது பெற்றது உன்னால் புது செருக்கு

என் பேச்சினிலே நீ புகுத்திய தேன் இனிமை

என் மூச்சினிலே தமிழ்த்தாயே உன் வலிமை

 

என் கைகள் கூப்பையிலே நீ ஒரு தெய்வம்

என் கால்கள் விரைகையிலே நீ ஒரு ஆலயம்

என் அங்கமெலாம் அன்பான நீ பெருந்தங்கம்

என் ஆயுளெலாம் உன்னன்பே என் சொர்க்கம்!

 

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

நன்றி மதிப்பிற்குரிய நண்பர் திரு பி.. கந்தநாதன்

துபாயில் ரத்ததான முகாம்

துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் ஆகியவை துபாய் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அல் வாஸல் மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமினை மே 06ம் தேதியன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வெகு சிறப்பாக நடத்தின. துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம்.ஸலாஹுத்தீன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், இதுபோன்ற சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்களைப் பாராட்டினார்.

 

துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் முன்னிலை வகித்தார். ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.முஹம்மது தாஹா வரவேற்றார். ரத்ததான முகாமினை இந்திய கன்சல் சஞ்சய் வர்மா துவக்கி வைத்து முதலாவதாக தானும் ரத்ததானம் செய்தார். மேலும் ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார்.

 

ரத்ததான முகாமில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவரும், நேபாளம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண், பெண் என்ற பேதமின்றி ரத்ததானம் வழங்க முன் வந்திருந்தனர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வமுடன் பணியாற்றினர். நிகழ்வில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும இயக்குநர் அஹமது சலாஹுத்தீன், மனிதவள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், மேலாளர் நிஜாமுத்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்விறகான அனுசரணையினை அல் ரவாபி, அல் அய்ன் வாட்டர், அல்கபே, மூன் டிவி, சிவ் ஸ்டார் பவன், அல் ரியாமி பிரிண்டிங் பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கியிருந்தன

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

Nandri : www.dinamalar.com

 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons