Thursday, June 16, 2011

துபாயில் நடிகை மனோரமாவிற்கு விருது

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு மற்றும் தமிழ்த்தேர் மாத இதழின் 5ம் ஆண்டுவிழா மே 27ம் தேதியன்று மாலை துபாய் மகளிர் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்திலிருந்து பழ.நெடுமாறனும், தமிழ் திரைப்பட நடிகை மனோரமாவும் பங்கேற்றார்கள். ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை நிகழ்த்த, செயலாளர் சிம்மபாரதியின் ஆண்டறிக்கையுடன், விழாவில் நாட்டிய விருந்தளித்தார் நிவேதிதா குழுவினர். மன வளர்ச்சி குன்றிய கார்த்திக் வழங்கிய பாடல் சபையின் ஒட்டுமொத்தப் பாராட்டுக்களை அள்ளியது. ஸ்ரீவித்யா வழங்கிய நாத இன்பமும், தொலைக்காட்சிப் புகழ் மேகநாதனின் நகைச்சுவை விருந்தும், குழந்தைகளின் விருப்பத்திற்கிணங்க வழங்கப்பட்ட மாயாஜாலக் காட்சிகளும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கின.

 

தொடர்ந்து தமிழ்த்தேரின் 5ம் ஆண்டுமலர், சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட, விழாவின் சிறப்புக்கட்டமாக ஆச்சி மனோரமாவிற்கு வானலை வளர்தமிழ் தமிழ்த்தேர் சார்பில் முத்தமிழ்க் காவியம் என்கிற பட்டம் பழ.நெடுமாறனால் வழங்கப்பட்டது. விழாவில் பஸ்லின், குத்தாலம் அஸ்ரப் மற்றும் அஜ்மான் மூர்த்தியின் சிற்றுரையைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய பழ.நெடுமாறன்,தமிழின் மேன்மை பற்றியும், தமிழரின் கடமை பற்றியும் விரிவாய் எடுத்துரைத்தார். திருவள்ளுவன் தந்த திருக்குறளில் எந்த இடத்திலும் தமிழ் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. காரணம், திருக்குறள் உலகம் முழுமைக்கும்,உலகில் வாழும் அனைவருக்கும் பொதுமறை என்பதனால் என்று அவர்தந்த புதிய விளக்கம் பாராட்டைப் பெற்றது. ஆச்சி மனோரமாவின் சிறப்புரை பல்சுவை நிறைந்ததாய் அமைந்திருந்தது. பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க அவர் பாடிய பல திரைப்பாடல்களை பாடி பரவசப்படுத்தினார். மேலும் தமிழ் மொழி பற்றி அவர் பாடிய ஒரு பாடல் தமிழ்த்தேருக்கு அலங்காரம் செய்ததுபோலிருந்தது. தனக்கு வழங்கப்பட்ட முத்தமிழ்க்காவியம் என்கிற பட்டத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

சிறப்பு விருந்தினர் பற்றிய நர்கிஸ் ஜியாவுதீனின் கவிதை, கவிஞர்.சந்திரசேகரால் எழுதப்பட்ட நிவேதிதா ஆனந்தனின் மனோரமா பற்றிய பாடல் உட்பட, வானலை வளர்தமிழ் அங்கத்தினரால் நடிக்கப்பட்டு முழுக்க முழுக்க அதன் அங்கத்தினராலேயே தயாரிக்கப்பட்ட "தமிழ்த்தேரே" என்னும் காணொளி காண்போரை கவர்ந்திழுத்தது. விழாவில் துணைச் செயலாளர் முகவை முகிலின் "ஈச்சமர நிழலில்" கவிதைத் தொகுப்பு, ஒரு கவிதை காணொளியுடன் வெளியிடப்பட்டது. விழாவை தமிழ்த்தேரின் ஆசிரியர் கவிஞர் காவிரிமைந்தன், நிவேதிதா ஆனந்தனுடன் இணைந்து தொகுத்து வழங்க, இறுதியாக தமிழ்த்தேரின் பொறுப்பாசிரியர் ஜியாவுதீன் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவிந்தராஜன், சிம்மபாரதி, கீழைராஸா, ஆனந்தன் மற்றும் காவிரிமைந்தன், ஜியாவுதீன், லட்சுமி நாராயணன், முகவை முகில், ஆதிபழனி, அபுதாபி டி.எம்.பழனி, துரை மலைவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

Nandri : www.dinamalar.com

 

1 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல படங்களுடன், நல்ல பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons