Google Plus LinkedIn Email

Thursday, February 3, 2011

அமீரகத்தில் தமிழர் திருவிழா


துபாய் : அமீரகத் தமிழர்கள் அமைப்பு பெருமையுடன் கொண்டாடிய தமிழர் திருவிழா ஜனவரி 28ம் தேதியன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில் விழா சரியாக 6.10க்கு தொடங்கியது. முதலில் நிவேதிதா ஆனந்தனின் தமிழ்த்தாய் வாழ்த்து , பிரித்திகா அன்பழகன் அமீரக தேசியகீதம் பாட விழா களை கட்ட தொடங்கியது.

அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சிறப்பு பாடல் ஒலிப்பரப்புடன், நிவேதிதா மற்றும் குழந்தைகள் குழுவினரின் செம்மொழிப் பாடல் நடனம் மிக நேர்த்தியாக நடந்தது. அதனை தொடர்ந்து தாயகத்திலிருந்து வந்திருந்த நடிகை மற்றும் தொகுப்பாளினி நீலிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மேடையேற, இளைய சமுதாயத்தின் கரவோசை அரங்கை அதிர வைத்தது.தொடர்ந்து ராஸ் மீடியா நடனக் குழுவினரின் நடன நிகழ்ச்சி, வந்திருந்தவர்களை கைத்தட்டி உற்சாகம் செய்ய செய்தது. பின்னர் எமிட்டா குழுவினரின் சிலம்பாட்டம், வாள் சண்டை, ஸ்ரீவித்யா கீபோர்டு இசை செவிக்கு உணவளிக்க, சிறப்பு விருந்தினர்கள் மேடையேறினர். அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முனைவர்.பர்வீன் சுல்தானா, வழக்குரைஞர் சுமதி, மைனா திரைப்பட நடிகை அமலா பால், சுபஸ்ரீ தணிகாசலம் மற்றும் ஈ.டி.ஏ. மெல்கோ இயக்குனர் அஹமது மீரான் மற்றும் நூர் அல் தீன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நூர்தீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அமுதரசன் தனது வரவேற்புரையில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் மகளிர் அணியை அறிமுகம் செய்து வைத்தார்.

வழக்குரைஞர் சுமதி, முனைவர். பர்வீன் சுல்தானா, சுபஸ்ரீ தணிகாசலம், ஈ.டி.ஏ. மெல்கோ இயக்குனர் அஹமது மீரான் மற்றும் நூர் அல் தீன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நூர்தீன் ஆகியோர் அமைப்பின் செயல்பாடுகளை பாராட்டி பேசினர் . சில நிமிடங்கள் தமிழில் உரையாடிய மைனா திரைப்பட நாயகி அமலா பால், ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க மேடையில் நடனம் ஆடினார். பின்னர் மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்து மகளிர் பிரிவு செயலாளர் அமிர்தா எடுத்துரைத்து மகளிர் பிரிவு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். அமீரகத்தில் முதன்முறையாக ஆடுதுறை அழகு.பன்னீர் செல்வத்தின் பாட்டு மன்றம் களைக் கட்டியது. நடுவரின் நகைச்சுவையான பேச்சு குழுமியிருந்தவர்களை கவர்ந்திழுத்தது. நள்ளிரவு கடந்தும் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சி என்ற பெருமையை அமீரகத் தமிழர்கள் அமைப்பு தட்டிச்சென்றது. தாயகத்திலிருந்து வந்திருந்த ராஜபாளையம் சொக்கனாதன்புதூர் கனகராஜ், கடைசிவரை ரசிகனாகவே அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.


குலுக்கல் முறையில் பிரிண்டர், டி.வி.டி. பிளேயர், மொபைல் போன், டி.வி., ஆகியன வழங்கப்பெற்று, நள்ளிரவு 12.40மணிக்கு மகளிர் அணி செயலாளர் அமிர்தாவின் நன்றியுடன் முடிவடைந்தது. 1000க்கும் அதிகமான தமிழர்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் குழுவினர் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகளுக்கு பொன்னாடைப் போர்த்தி சிறப்புச் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணைச்செயலாளர் முஸ்தாக், பொருளாளர் நயீம், இணை பொருளாளர் லஷ்மி நாராயணன், கலைச்செயலாளர் சிம்மபாரதி, ஒருங்கிணைப்பாளர் சலீம், நிறுவன உறுப்பினர் அன்பழகன் மற்றும் உறுப்பினர்கள் முகவை ராஜா, மதுக்கூர். ரூமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். ஒலி,ஒளி அமைப்பை கீழை.ராஸாகான் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.

NANDRI: WWW.DINAMALAR.COM
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons