ஜெத்தா : இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அமைந்துள்ள ஜெத்தா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த குழந்தைகளுக்கான நிகழ்ச்சி பிப்ரவரி 17ம் தேதியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. திருக்குரானிலிருந்து இறை வசனத்துடன் தொடங்கி, திருக்குறளிலிருந்து குறட்பாக்கள் சொல்லப்பட்டு, சவுதி மற்றும் இந்திய தேசிய கீதங்களுடன் நிகழ்ச்சி களைகட்ட துவங்கியது.
வரவேற்புரைக்குப் பின் கடைசி வரையிலும் குழந்தைகள் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் வந்திருந்த அனைவரையும் பிரமிக்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் இந்திய துணை தூதரக அதிகாரி மூர்த்தி, தமிழக ஹஜ் குழுமத்தின் துணை தலைவர் அபுபக்கர் மற்றும் மருத்துவர் கரிமுதீன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கரிமுதீன் மற்றும் சிராஜூதீன் ஆகியோருக்கு நினைவுக் கேடயம் அளிக்கப்பட்டது.
வழக்கத்திற்கு மாறாக, ஆடல் பாடல் என்று எதுவும் இல்லாமல், குழந்தைகளின் நினைவாற்றல், சமயோசிதமாக யூகிக்கும் திறன், தனித் திறமைகளை வெளிப்படுத்துதல், நாவைக்குழற வைக்கும் சொற்றொடர்களை பிழை இல்லாமல் திரும்பச் சொல்லுதல் , மாறு வேடமிட்டு நல்ல கருத்துக்களை சொல்லுதல் போன்ற பல போட்டிகளில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.
குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஜாவித், ஸ்ரீகணேஷ், முரளி, குணசேகரன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இரவு உணவுக்குப் பின்னரும் நிகழ்ச்சி தொடர்ந்தது.இறுதியாக நன்றியுரை வாசிக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்று வந்திருந்த அனைவரும் மன நிறைவோடு வீடு திரும்பினர்.
தினமலர் வாசகர் சிராஜ்
0 comments:
Post a Comment